×

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 86 மருத்துவ இடங்களை திரும்ப வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: அகில இந்திய இடஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 86 மருத்துவ இடங்களை தமிழ்நாடு அரசிடமே வழங்கக்கோரி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடந்து முடிந்துள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழ்நாட்டில் இருந்து அளிக்கப்பட்ட 86 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கிய பிறகே, அந்தந்த மாநிலங்களில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தொடங்கி நடைபெறும்.

அதன்படி, மாநிலங்களில் உள்ள மருத்துவ இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். அந்த வகையில் 2023-24ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் இருந்து 786 எம்.பி.பி.எஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இடங்களில் அனைத்து வகையான சுற்று கலந்தாய்வு நிறைவுக்கு பிறகும், தற்போது 86 இடங்கள் காலியாக உள்ளன.

இதில் தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மதுரை கல்லூரியில் 3 இடங்கள், ஸ்டான்லி, கோவை, ஓமந்தூரார் கல்லூரிகளில் தலா 2 இடங்கள், கோவை ஈ.எஸ்.ஐ.சி., கரூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர் தலா ஒரு கல்லூரி என 16 எம்.பி.பி.எஸ். இடங்களும், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 3 இடங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்களும் என மொத்தம் 86 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதுதவிர, மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பி.டி.எஸ். இடங்களும் காலியாக இருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளன. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 24 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 204 இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 51 இடங்கள் என 279 பி.டி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

கடந்த 2021-22ம் கல்வியாண்டுக்கு முன்பு வரை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், மீண்டும் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும். ஆனால் 2021-22ம் கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. காலி இடங்கள் இருந்தால் கூட திருப்பி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து மருத்துவப் படிப்பு இடங்கள் வீணாகி வருகின்றன. அதிலும் அதிக மருத்துவக் கல்லூரிகளை கொண்ட தமிழ்நாட்டுக்குதான் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

கடந்த ஆண்டில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் வீணாக போன நிலையில் இந்த ஆண்டு அதைவிட மிக மோசமாக 86 இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களை மாநில அரசிடம் வழங்கக்கோரி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஒவ்வொரு எம்.பி.பி.எஸ் இடமும் விரும்பத்தக்கது மற்றும் மதிப்புமிக்க தேசிய வளம் என்பது உங்களுக்கு தெரியும்.

இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்து, எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான கடைசி தேதியை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்து, மேலும் கவுன்சலிங் நடத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்தால், இந்த விலைமதிப்பற்ற இடங்களை நிரப்ப முடியும். எம்.பிபி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருந்தாலும், இந்த மாணவர்களுக்கு சிறப்பு அமர்வுகளை நடத்துவதன் மூலம் அவர்களுக்கு இடமளிக்க முடியும். குறிப்பாக மாணவர்களுக்கும் பொதுவாக நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் சாதகமான பதிலைப் பெறுவோம் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 86 மருத்துவ இடங்களை திரும்ப வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Union Govt. ,Chennai ,Union ,Health Minister ,Mansukh ,India ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...